கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர் முரளி விஜய் அபாரமாக ஆடி சதமடித்து, தனது அணியை வெற்றி பெற செய்தார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் முரளி விஜய் இடம்பெற்றிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பக்களிப்படவில்லை. அதன்பிறகு கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியிலிருந்து முரளி விஜய் நீக்கப்பட்டு  பிரித்வி ஷா சேர்க்கப்பட்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்களும் மட்டுமே எடுத்த முரளி விஜய், இரண்டாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய முரளி விஜய், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் எஸெக்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். எஸெக்ஸ் மற்றும் நாட்டிங்காம்ஷைர் அணிகளுக்கு இடையேயான நான்குநாள் டெஸ்ட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்காம்ஷைர் அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய எஸெக்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய், 56 ரன்கள் எடுத்தார். அந்த அணி 233 ரன்கள் எடுத்தது. 

56 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நாட்டிங்காம்ஷைர் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 337 ரன்களை குவித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய எஸெக்ஸ் அணியின் முரளி விஜய் மற்றும் டாம் வெஸ்ட்லி ஆகிய இருவரும் சதம் விளாசி, எஸெக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். முரளி விஜய் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார்.