- Home
- Sports
- Sports Cricket
- IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!
IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!
Abhishek Sharma Breaks Russell Record: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வெறும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட்டில் பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக 5,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஆண்ட்ரே ரசல் சாதனை முறியடிப்பு
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசலின் சாதனையை அவர் முறியடித்தார். ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் 2942 பந்துகளில் இதை எட்டியிருந்தார். ஆனால் அபிஷேக் சர்மா 2988 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
மேலும் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் அடித்த அரைசதம், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாகும். இதற்கு முன்பு கே.எல். ராகுல் (ஆக்லாந்து, 2020) மற்றும் ரோஹித் சர்மா (ஹாமில்டன், 2020) ஆகியோர் தலா 23 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் மற்றும் ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சூப்பர் பேட்டிங்கால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 238 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. கேப்டன் சூர்யகுமார் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார்.
ரிங்கு சிங் மின்னல் ஆட்டம்
ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில், இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

