ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. குஜராத் அணிக்கு மும்பை 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
குஜராத் அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை : ஐபிஎல் போட்டியில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இந்த சீசனில் இரண்டு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ளன, இரண்டு முறையும் சுப்மன் கில் தலைமையிலான டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று எலிமினேட்டர் போட்டிக்கான டாஸில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
எலிமினேட்டர் போட்டியில் மும்பை அதிரடி ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக இருக்கும். அந்த வகையில், முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே மும்பை அணி ஆதிக்கத்தை செலுத்தியது. பவர்ப்ளேயில் ரோஹித்தை விட ஜானி பேர்ஸ்டோவ் அதிக ஆபத்தானவராக இருந்தார். குஜராத் பந்துவீச்சாளர்களை பேர்ஸ்டோவ் விளாசினார். நான்காவது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவுக்கு எதிராக மட்டும் 26 ரன்கள் எடுத்தார். பவர்ப்ளே முடிவில் மும்பை விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்திருந்தது.
எட்டாவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய கில்லின் திட்டம் பலன் அளித்தது. 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ் அவுட்டானார். இதையடுத்து ரோஹித்-சூர்யா கூட்டணி களமிறங்கியது. 9வது ஓவரில் ரஷித் கானுக்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்த ரோஹித், 8.4 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 100 ஆக உயர்த்தினார். அடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம்
13வது ஓவரில் சூர்யகுமார் யாதவை சாய் கிஷோர் அவுட் செய்தார். 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். தொடர்ந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்து ரோஹித் ஒரு முனையில் நிலைத்து நின்றதால் மும்பையின் ஸ்கோர் உயர்ந்தது. 15 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 17வது ஓவரின் நான்காவது பந்தில் ரோஹித் சர்மா அவுட்டானார். 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 81 ரன்கள் எடுத்த ரோஹித் வெளியேறினார்.
இமலாய இலக்கு நிர்ணயித்த மும்பை
18.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 200ஐ எட்டியது. கடைசி ஓவரில் கோர்ட்ஸிக்கு எதிராக மூன்று சிக்ஸர்கள் அடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா (22*) மும்பையின் ஸ்கோரை 228 ஆக உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 228 ரன்களை குவித்தது. 229 ரன்களை எட்டி பிடித்தால் அடுத்த சுற்றுக்கு குஜராத் அணி முன்னேறும்.

