ஐபிஎல் வர்ணனையாளர்கள் ஆர்.சி.பி.யின் பந்துவீச்சை எதிர்மறையாக விமர்சித்ததற்காக முன்னாள் ஆர்.சி.பி. நட்சத்திர வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் கண்டனம் தெரிவித்தார். ஆர்.சி.பி.யின் பழைய தோல்விகளைப் பற்றிப் பேசியதாகக் குற்றம் சாட்டினார்.
தற்போதைய ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக பரப்பப்படும் எதிர்மறை கருத்துகள் குறித்து தென்னாப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 ஐபில் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வியாழக்கிழமை நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் அணியை சுலபமாக வீழ்த்தியது. முன்னதாக, இறுதி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அந்தப் போட்டியில் பெங்களூரு பவுலர்கள் 20 ஓவர்களில் 227 ரன்களைக் கொடுத்தனர். ரிஷப் பந்த் 61 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். இருந்தாலும், நுவான் துஷாரா நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் உட்பட மற்ற பந்துவீச்சாளர்கள் தங்கள் ஸ்பெல்களில் 40 ரன்களுக்கு மேல் கொடுத்தனர்.
ஐபிஎல் வர்ணனையாளர்களுக்கு ஏ.பி. டிவில்லியர்ஸ் கண்டனம்
இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய ஏ.பி. டிவில்லியர்ஸ், ஐபிஎல் வர்ணனையாளர்கள் ஆர்.சி.பி. பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்ததில் தனது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். வர்ணனையாளர்கள் ஆர்.சி.பி. பந்துவீச்சாளர்களை சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
“வர்ணனையாளர்களின் பேச்சு உண்மையாகவே எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆர்சிபி பந்துவீசும்போது அவர்கள் மிகவும் எதிர்மறையாகவே பேசினர். 'ஆர்.சி.பி.யின் பந்துவீச்சு அழுத்தத்தில் உள்ளது. அவர்களால் அதை நிர்வகிக்க முடியாது என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை, ஒரு நல்ல ஃபார்மில் இருக்கும் அணி தனது வேகத்தை இழக்கத் தொடங்குகிறது' என்று ஒரு முன்னாள் ஆர்.சி.பி. பேட்ஸ்மேன் கூறினார்.” என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், பிட்ச் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமானதாக இருக்கலாமே. புத்திசாலித்தனமான, கூர்மையான வர்ணனையாளர்களே, அது பேட்டிங்கிற்கு சிறந்த பிட்ச்சாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை நீங்கள் ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

“ஆர்.சி.பி.யின் பந்துவீச்சுப் பிரிவு மீண்டும் ஒருமுறை மோசமான ஃபார்மில் இருப்பதாக அவர்கள் கூறினர். சில சமயங்களில் வர்ணனையாளர்கள் அதே விஷயத்தைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. ஆம், ஆர்.சி.பி. இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை, ஆனால் களத்தில் என்ன நடக்கிறது என்பதை சரியாக பகுப்பாய்வு செய்யாமல், 'தோல்வியடைகிறார்கள், அவர்கள் பயனற்றவர்கள்' என்று சொல்வது மோசமானது." எனவும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“சில சமயங்களில் பந்துவீச்சு மோசமாக இருந்தது. ஆனால் 227 ரன்கள் என்ற ஸ்கோர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதையே குறிக்கிறது. ஆர்.சி.பி. அதை தங்கள் பேட்டிங்கில் நிரூபித்தார்கள்," என்று அவர் கூறினார்.
