மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 

ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில், விளையாடிய 2 போட்டியிலுமே வெற்றி பெற்ற ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகள், விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் காம்பீர் தலைமையிலான டெல்லி அணியும் மட்டுமே விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளிடம் மும்பை அணியும், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் டெல்லி அணியும் தோல்வியடைந்துள்ளன.

அதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளுமே இந்த போட்டியில் போராடும். மும்பையில் நடக்கும் போட்டியில், டாஸ் வென்ற காம்பீர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்கிறது. 

காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியில் மீண்டும் களமிறங்கிவிட்டார். அது மும்பை அணிக்கு வலு சேர்க்கும். அதேபோல, பென் கட்டிங்கிற்கு பதிலாக இலங்கை வீரர் அகிலா தனஞ்ஜெயாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.