mumbai indians defeats chennai super kings

தொடர் தோல்வியை சந்தித்துவந்த மும்பை அணி, சென்னை அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் தங்களது இருப்பை உறுதி செய்துள்ளது. 

6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி, முதலிடத்தில் இருந்த சென்னை அணியை நேற்று எதிர்கொண்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஒட்டுமொத்தமாக இழந்துவிடாமல் மும்பை காத்துக்கொள்வதற்கான முக்கியமான போட்டி இது.

தொடர் தோல்வியை சந்தித்துவரும் மும்பை, வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஃபார்ம் இல்லாமல் தவித்துவரும் பொல்லார்டுக்கு பதிலாக ஜே.பி.டுமினி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் முஸ்தாபிஸருக்கு பதிலாக பென் கட்டிங் சேர்க்கப்பட்டிருந்தார்.

புனேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் 12 ரன்களில் வெளியேறினார். வழக்கம்போல ராயுடு அதிரடியாக ஆடி 46 ரன்கள் அடித்தார். அரைசதம் கடந்த ரெய்னா, 75 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தோனி 26 ரன்களில் அவுட்டானார். பில்லிங்ஸ், பிராவோ ஆகியோர் சோபிக்கவில்லை. நடு மற்றும் கடைசி ஓவர்களை மும்பை பவுலர்கள் சிறப்பாக வீசி, சென்னை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் - லீவைஸ் ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. தொடக்கத்தில் லிவைஸ் சற்று நிதானமாக ஆட, சூர்யகுமார் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். 44 ரன்களில் சூர்யகுமார் அவுட்டானார்.

லிவைஸ் 47 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித்துடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். கடைசி 2 ஓவர்களுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசி வெற்றியை உறுதி செய்தார் ரோஹித். அந்த ஒவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டன.

கடைசி ஓவரில் தேவைப்பட்ட 5 ரன்களை எளிதாக எடுத்து மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.

மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.