தான் ஆடியதிலேயே வெறுக்கும் மற்றும் ஆடவே விரும்பாத ஒரு அணி ஆஸ்திரேலியா தான் என்றும் அந்த அணி கடினமான காலத்தில் இருக்கும் இந்த சூழலிலும் அவர்கள் மீது கொஞ்சம் கூட பரிதாபமே ஏற்படவில்லை எனவும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாகவே களத்தில் எதிரணி வீரர்களை சீண்டி, வம்புக்கு இழுத்து எதிரணி வீரர்களை உளவியல் ரீதியில் வீழ்த்தி அதன்மூலம் அவர்களை வீழ்த்த நினைப்பார்கள். அந்த வகையில், அனைத்து எதிரணி வீரர்களையும் வம்புக்கு இழுப்பர். அப்படி அந்த அணியின் ஸ்லெட்ஜிங்கில் சிக்கி கடும் கோபத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் மொயின் அலி.

மொயின் அலி ஒரு பத்திரிகையில் தொடர் ஒன்றை எழுதிவருகிறார். அதில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் மீது தனக்கு பரிதாபமே ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடையும் பான்கிராட்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது. அவர்கள் செய்தது மோசமான தவறு என்றாலும் அவர்களுக்கு இந்த தண்டனை மிகவும் அதிகபட்சமானது என சிலர் ஆதரவு குரல் கொடுத்தனர். இந்நிலையில் தான், அவர்கள் மீது பரிதாபமே ஏற்படவில்லை என மொயின் அலி கடும் கோபத்துடன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

அந்தளவிற்கு அவர் ஆஸ்திரேலிய அணி மீது கோபத்தில் இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள மொயின் அலி, 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை மோசமாக பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோதும் நான் கோபமாக இருந்ததில்லை. இதுகுறித்து அணி வீரர்களிடமும் அப்போதைய எங்களது பயிற்சியாளர் டிரெவர் பேலிஸிடமும் கூறினேன். 

நான் கூறியதை எங்கள் பயிற்சியாளர், அப்போதைய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமனிடம் கூறினார். இதையடுத்து இதுதொடர்பாக அந்த வீரரிடம் டேரன் லேமன் கேட்டதற்கு, அந்த வீரர் அவ்வாறு கூறவில்லை என மறுத்தார். அதைக்கேட்டு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். எனினும் அந்தப் போட்டியில் நான் கோபமாகவே இருந்தேன். 3-2 என ஆஷஸ் தொடரை நாங்கள் வென்ற பிறகு மீண்டும் அந்த வீரரிடம் நானே இதுகுறித்து நேரடியாக கேட்டேன். அப்போதும் அதை அவர் மறுத்துவிட்டார். 

இதுபோன்ற காரணங்களால் நான் விளையாடிய அணிகளில் மிகவும் வெறுப்பது ஆஸ்திரேலிய அணியைத்தான். அவர்கள் பழைய எதிரி என்பதற்காக இப்படி சொல்லவில்லை. அவர்கள் நடந்துகொள்ளும் விதம் மற்றும் எதிரணி வீரர்களையும் மக்களையும் அவர்கள் நடத்தும் விதம் ஆகியவற்றின் காரணமாகத்தான் இப்படி கூறுகிறேன். அவர்களுடன் அடுத்தடுத்து ஆடும்போது அவர்களின் மோசமான நடத்தைகளையும் முகத்தையும் முழுவதுமாக உணர்ந்தேன். 

அவர்களின் மோசமான நடத்தையின் விளைவாகத்தான் முக்கியமான வீரர்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். பொதுவாக ஒரு அணி சிரமங்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் மீது பரிதாபம் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஆஸ்திரேலிய அணி மீது பரிதாபமே ஏற்படவில்லை என மொயின் அலி தெரிவித்துள்ளார்.