ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், எல்லா காலத்துக்குமான சிறந்த இந்திய வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கை தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசை வீரராக இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்டையும் நான்காம் வரிசை வீரராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். 

5ம் வரிசையில் தற்போதைய இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியையும் 6ம் வரிசையில் ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ளார். கபில் தேவ், தோனி மற்றும் ஸ்பின்னர்களாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவரையும் வேகப்பந்து வீச்சாளராக ஜாகீர் கானை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர் கபில் தேவ் வேகப்பந்து வீசுவார் என்பதால் ஜாகீர் கான் ஒருவரை மட்டும் வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புறந்தள்ள முடியாத ஒரு வீரர் விவிஎஸ் லட்சுமணன். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எல்லா காலத்துக்குமான அசைக்க முடியாத வீரர் லட்சுமணன். ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய காலத்திலேயே அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். ஆனால் அவரை மைக்கேல் கிளார்க் அணியில் தேர்வு செய்யாதது ஆச்சரியமே. அதேநேரத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிய பங்களிப்பை செய்யாத ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார் மைக்கேல் கிளார்க். ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதால் வேண்டுமென்றே லட்சுமணனை தவிர்த்துள்ளாரோ என்றுதான் எண்ண தோன்றுகிறது. மைக்கேல் கிளார்க்கின் இந்த தேர்வை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.