தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

தோனி கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். அப்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் தோனி. உலக கோப்பையில் ஆடும் தோனியின் இடம் குறித்த சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. ஆனால் அப்போதெல்லாம் பேட்டிங்கை கடந்து தோனியின் அனுபவ ஆலோசனைகளும் அவரது தலைமைத்துவ அனுபவமும் அணிக்கு தேவை என்பதால் அவர் கண்டிப்பாக உலக கோப்பை அணியில் ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் அரைசதம் அடித்து மீண்டு வந்துள்ளார் தோனி. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனியின் ஃபார்ம் அணிக்கு மிகப்பெரிய பலம். ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடியதால் அனைவரின் கவனமும் அனைத்து விவாதங்களும் தற்போது தோனியை மையமாக வைத்தே உள்ளன.

இந்நிலையில், இந்திய அணியில் தோனியின் முக்கியத்துவம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தோனியின் கேப்டன்சி அனுபவமும் திறமையும் உலக கோப்பையில் விராட் கோலிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரிக்கி பாண்டிங் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, அவர் அணியில் ஆட வேண்டும் என்று நாங்கள் அனைவருமே விரும்பினோம். காரணம், அவரது கேப்டன்சி திறனும் அவரது அனுபவ ஆலோசனைகளும் எங்களுக்கு தேவை. ரிக்கி பாண்டிங்கின் அனுபவம் அணிக்கும் எனது கேப்டன்சிக்கும் மிகவும் உதவிகரமாக இருந்தது. எனக்கு எப்படி ரிக்கி பாண்டிங்கோ அப்படித்தான் கோலிக்கு தோனி என்று மைக்கேல் கிளார்க் கூறினார்.