ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிவருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று காலை தொடங்கி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக ராகுலும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். வழக்கம்போலவே ராகுல் களத்திற்கு வந்ததுமே பெவிலியன் திரும்பிவிட்டார். 6 பந்துகளில் 9 ரன்களுடன் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்து, வழக்கம்போலவே பொறுப்பாக ஆடி, அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.

மெல்போர்னில் நடந்த கடந்த டெஸ்டில் அறிமுகமாகி, அறிமுக இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்த மயன்க் அகர்வால், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பிறகு ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய மயன்க் அகர்வால், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். நாதன் லயனின் பவுலிங்கில் ஒரு சிக்ஸர் விளாசிய மயன்க், லயன் வீசிய அடுத்த ஓவரிலும் சிக்ஸர் விளாசினார். அந்த சிக்ஸருக்கு பிறகு மீண்டும் அதே ஓவரில் மறுபடியும் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மயன்க். கடந்த போட்டியில் 76 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்ட மயன்க், இந்த முறை 77 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

126 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் புஜாராவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த அனுபவ ஜோடி எப்போதும் போலவே பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்துவருகிறது. அருமையாக ஆடிய புஜாரா, இந்த இன்னிங்ஸில் மீண்டும் ஒரு அரைசதம் அடித்தார். லாபஸ்சாக்னே வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்து அரைசதம் கடந்த புஜாரா, அதே ஓவரில் மேலும் 2 பவுண்டரிகளை அடித்தார். 

ஆட்டம் இந்திய அணியின் கைகளில் வந்துவிட்டதால், புஜாரா - கோலி ஜோடி ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. முதல் நாள் டீ பிரேக் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்துள்ளது.