Marthandam Nemmaniyam college is leading the state level in Badminton ...

பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி மாணவி முதலிடம் பெற்றார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி மாணவி ஆர். திவ்யா ஸ்டெனி முதலிடமும், கும்பகோணம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பி. தாரணி இரண்டாம் இடமும், கிருஷ்ணகிரி அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி எம். சரண்யா மூன்றாம் இடமும் பெற்றனர்.

பின்னர், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்ட இந்தப் போட்டிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

துறைத் தலைவர் பி. சேகர், பேராசிரியைகள் கே. கவிதா, ஏ. சூரியா, எச். ரம்யா ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.