markram was not the right choice of captain said graeme smith
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தபோதிலும், ஒருநாள் தொடரை 5-1 என வென்று இந்திய அணி அசத்தியது.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தென்னாப்பிரிக்க அணி வென்றது. 5 போட்டிகளில் இந்தியாவிடம் வீழ்ந்தது. அந்த அணியின் சீனியர் வீரர்களான டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ், டி காக், ஸ்டெயின் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதுதான் படுதோல்விக்கு காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மூன்றாவது போட்டிக்கு பிறகு ஆடிய டிவில்லியர்ஸ், பெரிதாக சோபிக்கவில்லை.
முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸ் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த நிலையில், மார்க்ரம் கேப்டனாக்கப்பட்டார். 19 வயதுக்குட்பட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்திருந்தாலும் கூட இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக விளையாடும்போது அனுபவமில்லாத வீரரை கேப்டனாக்கியது விமர்சனத்துக்கு ஆளானது. அதனால் அவருக்கு அழுத்தம் அதிகமானது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், அனுபவமில்லாத மார்க்ரமை கேப்டனாக்கியது மிகவும் தவறு. சர்வதேச கிரிக்கெட்டில் முதலில் மார்க்ரம், சிறந்த வீரராக அவரை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக உருவாவதற்கு முன்னதாகவே அவருக்கு கேப்டன்சிப்பை கொடுத்தது தவறான காரியம் என கிரீம் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
