மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு 'கேல் ரத்னா'; தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு!
மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேருக்கு 30 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது
மத்திய அரசு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதேபோல் அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2024ம் ஆண்டில் விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ்
அண்மையில் சிங்கப்பூரில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அறுவடை செய்த மனுபாக்கர், பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பிரவீன் குமார் மற்றும் ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதும், 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்ய நித்யஸ்ரீ சுமதி சிவன் ஆகிய பேருக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டி குகேஷ் (உலக செஸ் சாம்பியன்)
18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் டிசம்பர் 14ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை 7.5-6.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்த அவர் சிறிய வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார்.
மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல் வீராங்கனை)
துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான 22 வயதான மனு பாக்கர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிகளில் (தனிநபர், கலப்பு) 2 வெண்கல பதக்கம் வென்றார். ஒரே ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற மனு பாக்கர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.
கடந்த வாரம் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மனு பாக்கர் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது குடும்பதினர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரவீன் குமார் (பாராலிம்பிக் தங்க நாயகன்)
2024ம் ஆண்டு பாரீஸ் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அவர் 2.08 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்பிரீத் சிங் (இந்திய ஹாக்கி அணி கேப்டன்)
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.