Parsi 2024:10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்தியாவிற்கு பதக்கம் உறுதி
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று மழைக்கு நடுவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் துப்பாக்கி சுடுதல், ரோவிங் (துடுப்பு படகு), டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 4ஆவது இடம் பிடித்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். எனினும், அவருக்கு நாளை ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவன் மற்றும் சஞ்சீவ் சிங் ஜோடியானது 12ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதையடுத்து ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூ சிங் சீமா இருவரும் பங்கேற்றனர். இதில் தகுதிச் சுற்று போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இதில் சரப்ஜோத் சிங் 577 புள்ளிகளுடன் 9ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இதே போன்று அர்ஜூன் சிங் சீமா 574 புள்ளிகளுடன் 18ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் இருவரும் களமிறங்கினர். இதில், சங்வான் 573 புள்ளிகளுடன் 15ஆவது இடம் பிடித்து வெளியேறினார். ஆனால், ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வந்த மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கான பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைப்பார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
- 10m Air Pistol
- Arjun Babuta
- Arjun Cheema
- Asianet News Tamil
- Elavenil Valarivan
- India at Paris 2024 Olympics
- Manu Bhaker
- Olympics 2024
- Olympics 2024 opening ceremony
- Paris 2024 Olympics
- Paris 2024 Olympics Shooting
- Paris Olympics 2024
- Paris Olympics 2024 India Schedule Day 1
- Paris Olympics 2024 India Schedule Day 2
- Paris Olympics 2024 tickets
- Ramita Jindal
- Rhythm Sangwan
- Sandeep Singh
- Sarabjot Singh