ஆசிய கோப்பை தொடரின் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் ஓராண்டுக்கு பிறகு களமிறங்கிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, அபாரமாக பந்துவீசிவருகிறார்.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இலங்கை அணியில் ஓராண்டுக்கு பின் மீண்டும் களமிறங்கிய லசித் மலிங்கா முதல் ஓவரை வீசினார்.

முதல் ஓவரின் 5வது பந்தில் லிட்டன் தாஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் மலிங்கா. இதையடுத்து அந்த அணியின் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான ஷாகிப் அல் ஹாசன் களமிறங்கினார். ஷாகிப் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவரை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் மலிங்கா. ஓராண்டுக்கு பின் இலங்கை அணியில் களமிறங்கிய மலிங்கா, முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

இதையடுத்து தமீம் இக்பாலுடன் முஷ்பிகூர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். இலங்கை பவுலர் லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் கையில் அடிபட்டதால் அவரும் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரில் ஒரு ரன்னுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்ததோடு, மற்றொரு வீரரும் ரிட்டயர்ட் ஆகியதால், இக்கட்டான நிலையில் இருந்தது வங்கதேச அணி.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து முஷ்ஃபிகூர் ரஹீம் மற்றும் மிதுன் ஆகிய இருவரும் பொறுப்பாக ஆடி, அந்த அணியை நெருக்கடியிலிருந்து மீட்டனர். இருவருமே அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 133 ரன்களை சேர்த்தது. நீண்ட நேரம் களத்தில் நின்ற இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறியபோது, மீண்டும் பந்துவீச வந்தார் மலிங்கா.

மலிங்காவை அந்த அணியின் கேப்டன் மேத்யூஸ் அழைத்ததற்கு மீண்டும் பலன் கிடைத்தது. 26வது ஓவரின் 3வது பந்தில் மிதுனை வீழ்த்தினார் மலிங்கா. 68 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து மிதுன் வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரை வீசிய அபான்சோ, மஹ்மதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்தினார். 28வது ஓவரின் கடைசி பந்தில் அடுத்த விக்கெட்டையும் வீழ்த்தினார் மலிங்கா.

முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, பின்னர் நெருக்கடியிலிருந்து மீண்ட வங்கதேசம், மீண்டும் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 134வது ரன்னில் 3வது விக்கெட்டை இழந்த வங்கதேசம், 142 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 29 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து ஆடிவருகிறது. இலங்கை அணியின் மலிங்கா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முஷ்ஃபிகூர் ரஹீம் மற்றும் மெஹிடி ஹாசன் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். ரஹீம் 71 ரன்களுடன் களத்தில் உள்ளார்.