Mahendra Singh Dhoni is back.
2 ஆண்டுகள் தடைக்கு பின், 2018ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ‘தல’ என செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மீண்டும் இடம் பெறுகிறார். இதற்கான அனுமதியை ஐ.பி.எல். நிர்வாகக் குழு அளித்தது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தமிழக மக்கள் ‘விசில்’ போட காத்திருக்கிறார்கள்.
2013ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் காரணமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் 2 ஆண்டுகளுக்கு தடை செய்து நீதிபதி லோதா தலைமையிலான குழு 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதற்கு பதிலாக புனே சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டன.புனே சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடி வருகிறார்.
சி.எஸ்.கே அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் விதிக்கப்பட்ட தடை இந்த ஆண்டு முடிகிறது. இதையடுத்து 2018ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் இரு அணிகளும் இணைகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டித் தொடரில் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களின் வீரர்களை தக்கவைத்துக் கொள்வது தொடர்பான நிர்வாகிகள் குழு, ஐ.பி.எல். பொதுக்குழு ஆகியோரின் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வீரர்களை தக்கவைப்பது, ஊதியம், விதிமுறைகள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் 2018ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.
அதில், இரு அணிகளும் 2015ம் ஆண்டில் தாங்கள் வைத்திருந்த வீரர்களில் 5 பேரை தக்கவைக்கவும், அதில் 3 பேர் இந்திய வீரர்களாகவும், இருவர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், ஏற்கனவே இருக்கும் வீரர்களை தக்கவைக்காவிட்டால், வீரர்கள் ஏலத்தின்போது, 3 மேட்சிங் கார்டுகள் அணி நிர்வாகத்துக்கு வழங்கப்படும்.
ஒட்டுமொத்தமாக ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 25 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அணி வீரர்களுக்கு ஊதியமாக இந்த ஆண்டு ரூ.80 கோடியும், 2019ம் ஆண்டு ரூ.82 கோடியும், 2020ம் ஆண்டு ரூ.85 கோடியும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு அணி 75 சதவீத ஊதியத்தொகையை செலவு செய்யலாம்.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டுவைன் பிராவோ, மகேந்திர சிங் தோனி ஆகியோரை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பொலார்ட், ஜஸ்பிரித் பும்ரா, பாண்ட்யா சகோதரர்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராத் கோலி, டீ வில்லியர்ஸ், கிவிஸ் கெயில் ஆகியோரை தக்கவைக்கப் போவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சன் ரைசர்ஸ் அணி டேவிட் வார்னரையும், புவனேஷ்குமாரையும் தக்கவை திட்டமிட்டுள்ளது..
