இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தரத்தை பிசிசிஐ குறைத்துள்ளது. இது தோனியின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி, தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வீரர்களின் ஊதிய உயர்வுக்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டது. அதன்படி, வீரர்களை தரம்பிரித்து அவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதே தோனியின் தரம் குறைக்கப்படலாம் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. சீனியாரிட்டி, திறமை, அணியில் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏ+, ஏ, பி, சி என வீரர்கள் தரம்பிரிக்கப்படுவர்.

ஏ+ வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ கிரேடு வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி கிரேடு வீரர்களுக்கு 3 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு 1 கோடியும் ஊதியமாக வழங்கப்படும். அந்தவகையில் ஏற்கனவே ஏ+ கிரேடிலிருந்த முன்னாள் கேப்டன் தோனியை ஏ கிரேடுக்கு தள்ளப்பட்டுள்ளார். தோனியின் தர குறைப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அணியின் சீனியர் வீரரும், மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கும் உரியவரான தோனி, 36 வயதை எட்டிவிட்ட போதிலும் தற்போதும் அணிக்கு பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அவரது தரம் ஏன் குறைக்கப்பட்டது என ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

ஏ+ கிரேடில், கோலி, ரோஹித், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய வீரர்கள் உள்ளனர்.