Maharashtra Open Indian shuttler Yuki Bhambri wins the first round

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட யூகி பாம்ப்ரி, தனக்கான வாய்ப்புகளை வீணடித்ததன் மூலமாக பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட்டிடம் வீழ்ந்தார்.

உலகின் 81-ஆம் நிலை வீரரும், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான ஹெர்பர்ட் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரியை வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் இந்திய வைல்ட் கார்ட் வீரரான ராம்குமார் ராமநாதன், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார். அதில் வெற்றி பெறுபவர், காலிறுதியில் ஹெர்பர்ட்டுடன் மோதுவார்.

இதர ஆட்டங்களில், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேர் 6-4, 6(4)-7, 7-6(6) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிச்சை வென்றார்.

காலிறுதியில் பெனாய்ட், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் ராபின் ஹசியை எதிர்கொள்கிறார். முன்னதாக ஹசி, 3-6, 7-6(5), 7-5 என்ற செட் கணக்கில் சிலியின் நிகோலஸ் ஜேரியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.