உலகின் மிகச்சிறந்த நார்வே செஸ் தொடர் இன்று தொடங்கும் நிலையில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், டி.குகேஷ் மோதுகின்றனர்.
Norway Chess: Magnus Carlsen-Gukesh clash: உலகப்புகழ் பெற்ற நார்வே செஸ் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் மோதுகின்றனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பெண்கள் பிரிவில் ஆர் வைஷாலி, கோனேரு ஹம்பி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன்-குகேஷ் மோதல்
இன்று தொடங்க உள்ள முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உடன் குகேஷ் மோதுகிறார். கடந்த ஆண்டு நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஆகவே இந்தியாவின் குகேஷ் அவரை வீழ்த்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகேசி சீனாவின் வெய் யீவை சந்திக்கிறார்.
கொனேரு ஹம்பி வைஷாலி பலப்பரீட்சை
பெண்கள் பிரிவில் இரண்டு முறை உலக ரேபிட் சாம்பியனான இந்தியாவின் கொனேரு ஹம்பி முதல் சுற்றில் தனது சக இந்திய வீராங்கனை ஆர் வைஷாலியை எதிர்கொள்வார். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் ஆறு வீரர்கள் பெற்றுள்ளனர். இரட்டை ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறும் நார்வே செஸ் போட்டி உலகின் மதிப்புமிக்க விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
4 இந்திய வீரர்கள்
நார்வே செஸ் தொடரில் நான்கு இந்திய வீராங்கனைகளின் பங்கேற்பது இந்தியாவில் செஸ் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது, இருப்பினும் கார்ல்சன், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர்கள் நகமுரா மற்றும் சீன பெண்கள் இரட்டையர்களான ஜூ வென்ஜுன் மற்றும் லை டிங்ஜி போன்ற எதிரணி வீரர்களை இந்திய வீரர், வீராங்கனைகள் சாய்ப்பது பெரும் சவாலாக இருக்கும்.
மொத்த பரிசுத் தொகை என்ன?
நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் நம்பர் 1 இடத்தில் உள்ள நிலையில், நகமுரா இரண்டாவது இடத்தில் உள்ளார். குகேஷ் 3வது இடத்திலும், எரிகைசி 4வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக உலக பட்டத்தை வென்ற சாதனையைத் தொடர்ந்து குகேஷ் இதிலும் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நார்வே செஸ் தொடரில் மொத்த பரிசு சுமார் 162,681 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே செஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்கள்
நார்வே செஸ் தொடர் ஆண்கள் பிரிவு: மேக்னஸ் கார்ல்சன் (நோர்வே), ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), டி குகேஷ் (இந்தியா), அர்ஜுன் எரிகைசி (இந்தியா), ஃபேபியானோ கருவானா (அமெரிக்கா), வெய் யி (சீனா).
நார்வே செஸ் தொடர் பெண்கள் பிரிவு: ஜு வென்ஜுன் (சீனா), லீ டிங்ஜி (சீனா), கோனேரு ஹம்பி (இந்தியா), அன்னா முசிச்சுக் (உக்ரைன்), ஆர் வைஷாலி (இந்தியா), சரசாதத் காடெமல்ஷாரீ (எஸ்பி).
