Looking at the impact of ICCs new rules - Kapil Dev ...
ஐசிசியின் புதிய விதிமுறைகள் விளையாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “பூம்ராவை முதல் முறையாக பார்க்கும்போது, சற்று வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் அவர் எவ்வாறு அணியில் நீடிக்கப் போகிறார் என்று எண்ணினேன். ஆனால், என் போன்றவர்களின் எண்ணங்களை அவர் மாற்றிவிட்டார்.
பூம்ரா மிகவும் அற்புதமாக பந்துவீசுகிறார். வித்தியாசமான உடல்மொழி உடையவர்களும் அற்புதமாக ஆடி, அணியில் நீண்ட நாள்களுக்கு நீடிக்கலாம் என்பதை நிரூபித்துவிட்டார்.
கோலியை பொருத்த வரையில், ஒவ்வொரு கேப்டன்களுக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும். அதையே அவர்கள் அணியில் அமல்படுத்துவார்கள். அந்த வகையில் விராட் கோலி உடற்தகுதி விஷயத்தை அணியில் தீவிரமாக்கியுள்ளார். அவரது அந்த முடிவை நாம் மதிக்க வேண்டும். கேட்ச்களை பிடிக்கவில்லை என்றாலோ, ஃபீல்டிங்கில் ரன்களை விட்டுக் கொடுத்தாலோ ஒரு வீரர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் பலனில்லை. அந்த வகையில் குறைந்த அளவிலான ஒரு உடற்தகுதி அவசியமாகிறது.
ஹார்திக் பாண்டியாவை பொருத்த வரையில், அவரை சிறந்த ஆல் ரவுண்டராக மாற்றும் முயற்சியாகவே, அவரை வெவ்வேறு ஆர்டர்களில் களமிறக்கி அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது.
ஒரு விளையாட்டின் மேம்பாட்டுக்காகவே அதில் புதிய விதிகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் ஐசிசியின் புதிய விதிமுறைகள் விளையாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
