ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு இந்திய பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, போட்டி தொடங்கிய திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம், நாடு முழுவதும் அதிகமான பார்வையாளர்களை இந்த விளையாட்டு சென்றடையும். பில்லியர்ட்ஸ் விளையாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான சிறந்த வழி, அதில் தலைசிறந்த வீரர்கள் விளையாடுவதை பார்ப்பது தான்.

இந்த நேரடி ஒளிபரப்பின் மூலம் அதிகளவிலான இளைஞர்கள் பில்லியர்ட்ஸ் விளையாட்டை தங்களது எதிர்காலமாக தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பங்கஜ் அத்வானி கூறினார்.

இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான பங்கஜ் அத்வானியுடன், இந்த ஆண்டின் தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற செüரவ் கோத்தாரி, 2015-ஆம் ஆண்டு பட்டம் வென்ற துருவ் சித்வாலா, நடப்பு ஆண்டின் ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன் ரூபேஷ் ஷா, 2 முறை உலக சாம்பியன் பீட்டர் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியாவின் பென் ஜட்ஜ், பிரிட்டனின் நலின் படேல், ராபர்ட் ஹால் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்த ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் 8 நாள்களுக்கு நடைபெற உள்ளது.