தலைசிறந்த வீரரான பிரயன் லாராவிற்கு சவாலாக திகழ்ந்த இரண்டு பவுலர்கள் யார் என்று லாராவே தெரிவித்துள்ளார்.

எல்லா காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர்களாக டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா ஆகியோர் திகழ்கின்றனர். சச்சின் டெண்டுல்கர் - பிரயன் லாரா ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்றால், ஒருவரை குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்தளவிற்கு இருவரும் நிகரான திறமை வாய்ந்தவர்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களை குவித்துள்ள பிரயன் லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை குவித்த ஒரே வீரர் லாரா தான். 

தலைசிறந்த வீரரான லாரா, அவர் ஆடிய காலத்தில் அவரை திணறவைத்த பவுலர்கள் யார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள லாரா, முத்தையா முரளிதரனும் ஷேன் வார்னேவும் என்னை குழப்பிவிடுவர். நாங்கள் ஆடிய காலக்கட்டத்தில் முரளிதரனும் வார்னேவும்தான் இரண்டு தலைசிறந்த ஸ்பின் பவுலர்கள் என லாரா தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுடன் முரளிதரன் முதலிடத்திலும் 708 விக்கெட்டுகளுடன் வார்னே இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்று லாரா கூறினாலும் இவர்களது பந்துவீச்சை சிறப்பாக ஆடி லாரா ரன்களை குவித்துள்ளார். 1993ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் 277 ரன்கள் அடித்தார் லாரா. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னே ஆடினார். அவரது பந்துவீச்சையும்தான் பதம்பார்த்தார் லாரா. 

அதேபோல 2001ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் 688 ரன்களை குவித்தார் லாரா. இவ்வாறு முரளிதரன் மற்றும் வார்னே ஆகிய இருவரின் பவுலிங்கையும் சிறப்பாக ஆடியவர் லாரா.