கடந்த 30 ஆண்டுகளில் ஆடிய இந்திய வீரர்களில் 11 வீரர்களை தேர்வு செய்து தனது கனவு டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த இந்திய வீரர்களில் ஒருவர் அனில் கும்ப்ளே. அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில், 619 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள கும்ப்ளே, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையுடையவர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார். 

இந்நிலையில், 1990ம் ஆண்டுக்கு பிறகான கடந்த 30 ஆண்டுகளில் ஆடிய வீரர்களில் 11 வீரர்களை தேர்வு செய்து கனவு அணியை அறிவித்துள்ளார். 

கும்ப்ளே தலைமையிலான அவரது கனவு அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கை தேர்வு செய்துள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு தொடக்க வீரராக களமிறங்குவது புதிதல்ல, அவர் எந்த வரிசையிலும் ஆடக்கூடியவர் என்பதாலும் மிடில் ஆர்டருக்கு வேறு சில வீரர்கள் இருப்பதால் ராகுல் டிராவிட்டை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார் கும்ப்ளே. 

3ம் வரிசையில் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியையும் 4ம் வரிசையில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். கோலிதான் தற்போதைய இந்திய அணியின் நிரந்தர 3ம் வரிசை வீரர். சச்சின் டெண்டுல்கர் அவர் ஆடிய காலத்தில் 4ம் வரிசையில் தான் ஆடினார். 5ம் வரிசையில் விவிஎஸ் லட்சுமணனை தேர்வு செய்துள்ளார். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 6 மற்றும் 7ம் வரிசைகளில் முறையே முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் தோனி ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் கும்ப்ளே. 

தன்னுடன் மற்றொரு ஸ்பின்னராக அவருடன் நீண்டகாலம் பந்துவீசிய ஹர்பஜன் சிங்கையும் வேகப்பந்து வீச்சாளர்களாக ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரையும் கும்ப்ளே தேர்வு செய்துள்ளார். ஹர்பஜனை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் வெற்றிகரமான வீரராக திகழும் பட்சத்திலும் கும்ப்ளே ஹர்பஜனை தேர்வு செய்ததற்கான காரணம், இருவரும் ஒன்றாக ஆடியதுதான். கும்ப்ளேவின் நல்ல ஸ்பின் பார்ட்னர் என்ற முறையில் ஹர்பஜனை தேர்வு செய்துள்ளார். 

தனது கனவு அணியில் தன்னுடன் ஆடிய சச்சின், டிராவிட், லட்சுமணன், ஸ்ரீநாத், ஹர்பஜன், சேவாக் ஆகியோரை தேர்வு செய்த கும்ப்ளே, கங்குலியை மட்டும் கழட்டிவிட்டுள்ளார். மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் தேவையில்லை என்பதால் கங்குலியை கழட்டிவிட்டதாக கும்ப்ளே விளக்கமளித்துள்ளார். 

கும்ப்ளேவின் கனவு டெஸ்ட் அணி:

ராகுல் டிராவிட், சேவாக், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், கபில் தேவ், தோனி(விக்கெட் கீப்பர்), அனில் கும்ப்ளே(கேப்டன்), ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத், ஜாகீர் கான்.