ஒருபோதும் சுயநலமாக ஆடாத வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான சேவாக் அபாயகரமான வீரர். அசாத்தியமான அதிரடியால் போட்டியின் போக்கையே மாற்ற வல்லவர். இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்குவதை வழக்கமாக கொண்டவர் சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர், 2 முச்சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

சேவாக்கின் மிகப்பெரிய பலமே, எதிரணி எதுவாக இருந்தாலும் சரி, எதிரே பந்துவீசுவது யாராக இருந்தாலும் சரி, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை ஆடக்கூடியவர்.

இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 23 சதங்களுடன் 8586 ரன்களையும் 251 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8273 ரன்களையும் குவித்துள்ளார் சேவாக். 

இந்திய அணியின் மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரரான சேவாக்கிற்கு குமார் சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார். சேவாக் குறித்து கருத்து தெரிவித்த சங்கக்கரா, முதன்முதலில் வீரேந்திர சேவாக்கின் பேட்டிங்கை பார்த்தபோது அதிகளவில் ரசித்து பார்த்தேன். அவரது பேட்டிங் என்னை ஈர்த்தது. அவரது பேட்டிங் திறமையால் மட்டுமல்ல, விரைவில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற எண்ணம் கொண்ட பேட்ஸ்மேன்களை கண்டறிவது மிகவும் கடினம். இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்து அடித்து ஆட தொடங்கி பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுவார். அதேபோல அவரது சொந்த பேட்டிங் சராசரியை பற்றியோ சாதனைகளை பற்றியோ யோசிக்கவே மாட்டார். அவரது எண்ணம் முழுவதுமே, அணிக்காக விரைவில் ரன்களை குவித்து வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று சேவாக்கை புகழ்ந்துள்ளார் குமார் சங்கக்கரா.