ஒரே ஒரு போட்டியில் குருணல் பாண்டியாவின் பவுலிங்கை மேக்ஸ்வெல் அடித்ததற்கு ஒவ்வொரு போட்டியிலும் பழிவாங்கிவருகிறார் குருணல் பாண்டியா. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கடைசி போட்டியில் வென்று இந்திய அணி 1-1 என சமன் செய்தது. முதல் போட்டியில் டக்வொர்த் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதையடுத்து சிட்னியில் நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 

இந்த தொடரின் முதல் போட்டியில் குருணல் பாண்டியாவின் பவுலிங்கை மேக்ஸ்வெல் வெளுத்து வாங்கினார். குருணல் பாண்டியா வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் 23 ரன்களும் அதற்கு அடுத்து அவர் வீசிய 16வது ஓவரில் 17 ரன்களும் என அந்த இரண்டு ஓவர்களில் மட்டுமே 40 ரன்கள் குவிக்கப்பட்டன. அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 55 ரன்களை விட்டுக்கொடுத்தார் குருணல் பாண்டியா. 

மேக்ஸ்வெல்லிடம் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெல்லை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் குருணல் பாண்டியா. மேக்ஸ்வெல்லை வீழ்த்திய மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக கொண்டாடினார் குருணல். பின்னர் நேற்று சிட்னியில் நடந்த மூன்றாவது டி20 போட்டியிலும் மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார் குருணல். முதல் போட்டியில் மேக்ஸ்வெல் அடித்ததற்கு இரண்டு போட்டிகளில் பதிலடி கொடுத்து பழிவாங்கிவிட்டார் குருணல்.