டெல்லி அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 11வது சீசனின் 13வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் காம்பீர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் நரைன் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான கிறிஸ் லின்னுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய உத்தப்பா 35 ரன்களிலும் லின் 31 ரன்களிலும் வெளியேறினர். 

நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடிய நிதிஷ் ராணா, 59 ரன்கள் அடித்தார். பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடியதுபோலவே நேற்றும் சிக்ஸர் மழை பொழிந்தார் ஆண்ட்ரே ரசல். 12 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்து ரசல் அவுட்டானார்.

ரசலின் அதிரடியால், கொல்கத்தா அணி 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின், மேக்ஸ்வெல், ரிஷப் பண்ட்டைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. அதனால் அந்த அணி, 14.2 ஓவரின் முடிவில் 129 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

கொல்கத்தா அணியின் சார்பில் சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக நிதிஷ் ராணா தேர்வு செய்யப்பட்டார். 4 போட்டிகளில் 2 வெற்றியை பதிவு செய்துள்ள கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.