Kohli topped ICC Batsman rankings Jaspreet Bumra topped the bowling ...

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பிரிவில் 900 புள்ளிகளைக் கடந்து கோலி முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

இதில் ஒருநாள் தரவரிசையில் தற்போது 909 புள்ளிகளுடன் இருக்கும் கோலி, கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் ஒரே நேரத்தில் 900 புள்ளிகளைக் கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சாதனை புரிந்த முதல் வீரர் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆவார்.

அதேவேளையில், இரு பிரிவுகளிலும் 900 புள்ளிகளைக் கடந்தவர்கள் வரிசையில் கோலி 5-வது வீரர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 சதங்கள் உள்பட மொத்தமாக 558 ரன்கள் விளாசிய நிலையில், கோலி இந்த முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஒருநாள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள் வரிசையில் கோலி தற்போது 7-வது இடத்தில் உள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ் 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் ஏற்றம் கண்டு முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் முதலிடத்தை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இதையடுத்து முதலிடம் பிடித்த இளம் வீரர் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார்.

யுவேந்திர சாஹல் 8 இடங்கள் முன்னேறி 21-வது இடத்துக்கு வந்துள்ளார். குல்தீப் யாதவ் 15 இடங்கள் முன்னேறி 47-வது இடத்துக்கு வந்துள்ளார்.