kohli speaks about losing games in this ipl season
இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றிராத பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் கனவுடன் களம் கண்டது. ஆனால் தொடர் தோல்விகளிலிருந்து மீள முடியாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதிய பெங்களூரு அணி, 147 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. 10 போட்டிகளில் 3ல் வெற்றியுடன் வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பெங்களூரு அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.
ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கு பிறகு பேசிய பெங்களூரு கேப்டன் கோலி, இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான். நாங்கள் சரியாக ஆடவில்லை. சிறப்பாக தொடங்கினாலும் பிற்பாதியில் எதிரணியை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த விட்டுவிடுகிறோம். இதுதான் இந்த தொடர் முழுவதும் எங்கள் அணியின் கதையாக உள்ளது.
நெருக்கடியான தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மனவலிமை உள்ள வீரர்களை பெற்றிருந்தால், அந்த அணி இதுபோன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடும். அந்தவகையில் ஹைதராபாத் அணி அந்த மாதிரியான வீரர்களை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி, அவர்களின் பலத்தையும் வரம்பையும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றிகரமாக தொடர்கிறார்கள். இது அவர்களின் கதையாக உள்ளது.
