kohli opinion about winning against punjab
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 48வது லீக் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கும் கெய்ல் மற்றும் ராகுலை சொற்ப ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார். 5 ஓவருக்கு உள்ளாகவே கெய்ல் மற்றும் ராகுலை வீழ்த்திவிட்டார் உமேஷ் யாதவ். அதன்பிறகு களமிறங்கிய கருண் நாயர், மயன்க் அகர்வால், ஃபின்ச், அக்ஸர் படேல், ஸ்டோய்னிஸ், அஷ்வின், ஆண்ட்ரூ டை ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, பஞ்சாப் அணி 15.1 ஓவருக்கே 88 ரன்களில் ஆல் அவுட்டானது.
89 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் கோலியும் பார்த்திவ் படேலுமே எளிதாக இலக்கை எட்டிவிட்டனர். விக்கெட்டை இழக்காமல் 8.1 ஓவருக்கே இலக்கை எட்டி பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் கோலி, எந்த குறையும் சொல்லமுடியாத வகையில் அனைத்து வகையிலும் எங்களுக்கு இது சிறந்த போட்டியாகவே அமைந்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களை(கெய்ல், ராகுல்) கண்டு நாங்கள் பயப்படுவோம் என அவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் எங்கள் அணியின் பவுலர்கள் சிறப்பாக வீசினர். ஒரே ஓவரில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் உமேஷ். இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை; இதுதான் எங்களுக்கு சாதகமாக உள்ளது என கோலி தெரிவித்தார்.
