கிரிக்கெட்டை பொறுத்தவரையில் டாஸே பல நேரங்களில் போட்டியின் முடிவை தீர்மானிக்கும். அந்த வகையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில்  அனைத்து போட்டிகளிலும் கோலி டாஸ் தோற்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போகும் குக் சிறப்பாக ஆடிவருகிறார். குக்கும் ஜென்னிங்ஸும் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டபோது, விராட் கோலி ஹெட் கேட்டார். ஆனால் டெய்ல் விழுந்தது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலுமே கோலி, தலை தான் கேட்டார். ஆனால் அனைத்திலுமே டெய்ல் தான் விழுந்தது. அதனால் 5 போட்டிகளிலுமே கோலி டாஸ் தோற்றார். 

அதை குறிப்பிடும் வகையில், காயினின் இருபக்கமும் தலை இருந்தால்தான் நான் டாஸ் ஜெயிப்பேன் போல..? என காமெடி செய்தார். ஒரு போட்டியிலாவது கோலி மாற்றி கேட்டிருக்கலாம். அப்படி மாற்றி கேட்டிருந்தால் டாஸாவது ஜெயித்திருக்கலாம். டாஸ் ஜெயித்திருந்தால் இந்திய அணி கண்டிப்பாக முதலில் பேட்டிங் தான் செய்திருக்கும். முதலில் பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அந்த போட்டியில் இந்தியா வென்றது. அதற்கு அடுத்த நான்காவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வென்ற இங்கிலாந்து அணி, இந்த போட்டியிலும் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

போட்டிக்கு போட்டி அணியை மாற்றும் விராட் கோலி, ஒருமுறை டாஸை மாற்றி கேட்டிருக்கலாமே..? அதுகூட போட்டியின் முடிவை மாற்றியிருக்கும்.