299 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இந்திய அணி, கடந்த போட்டியை போல அல்லாமல் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்  முடிவில் 298 ரன்களை குவித்தது. ஷான் மார்ஷின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இன்னும் அதிகமான ஸ்கோரை எட்டியிருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் மேக்ஸ்வெல் மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்தியதால் 298 ரன்களுக்கு சுருட்ட முடிந்தது.

299 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்து தவான் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அதிரடியை தன் கையில் எடுத்த ரோஹித் சர்மா, 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த ராயுடுவும் நிதானமாக ஆடினார். எனினும் ராயுடு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 24 ரன்களில் ராயுடு நடையை கட்டினார். கடந்த முறை 3 ரன்களில் வெளியேறிய கிங் கோலி, இந்த முறை சதம் விளாசினார். இலக்கை விரட்டுவதில் வல்லவரான கோலி, அணியை வெற்றிப்பாதையில் அழைத்து செல்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 8 ஓவர்களில் 70 ரன்கள் தேவை. கோலியும் தோனியும் களத்தில் உள்ளதால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.