வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சாதனை சதம் வீணாகிவிட்டது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துவிட்டது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி நேற்று புனேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹெட்மயரின் அதிரடியான 37, ஷாய் ஹோப்பின் 97 ரன்கள் மற்றும் கடைசி நேர நர்ஸின் அதிரடியால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 283 ரன்களை குவித்தது. 

பும்ரா அருமையாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் அதற்கு நேர்மாறாக புவனேஷ்வர் குமார் 70 ரன்களை விட்டுக்கொடுத்தார். கலீல் அகமதுவும் பெரிதாக சோபிக்கவில்லை. 

இதையடுத்து 284 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, வழக்கம்போல வந்ததுமே வெளியேறினார். கோலியும் தவானும் சேர்ந்து சிறப்பாக ஆடிவந்த நிலையில், தவான் 35 ரன்களில் நர்ஸின் சுழலில் சிக்கி வெளியேறினார். அதன்பிறகு மிடில் ஆர்டரில் பெரிதும் நம்பப்பட்ட ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். தோனி இந்த முறையும் சோபிக்கவில்லை. வெறும் 7 ரன்களில் நடையை கட்டினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் வழக்கம்போல நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்களையும் சேர்த்துக்கொண்டிருந்த கோலி, கோலி மீண்டுமொருமுறை சதமடித்தார். ஹாட்ரிக் சதமடித்த கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 38வது சதத்தை பூர்த்தி செய்தார். 

இதன்மூலம் தொடர்ந்து அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3 சதங்கள் விளாசிய கோலி, 8 பேருடன் அந்த சாதனையை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் ஹாட்ரிக் சதமடித்த முதல் இந்திய வீரர் கோலி. போட்டிக்கு போட்டி சதத்தையும் சாதனையையும் குவித்துவரும் கோலி, இந்த போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. 

இந்த பட்டியலில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசிய இலங்கையின் குமார் சங்ககரா முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்வர் மற்றும் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ், டிவில்லியர்ஸ், டி காக், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் ஆகியோர் தொடர்ந்து மூன்று சதங்கள் விளாசியுள்ளனர். அவர்களுடன் கோலி இணைந்துள்ளார். 

ஆனால் சதமடித்ததும் 107 ரன்களிலேயே கோலி வெளியேற அதன்பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி சதமடித்தாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது. 

5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. அடுத்த போட்டி நாளை மும்பையில் நடக்க உள்ளது.