kohli equals ganguly record as captain
விராட் கோலியின் சதம் மற்றும் ரஹானேவின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா இழந்தது. இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸின் அபார சதத்தால், 50 ஓவர் முடிவில் 269 ரன்கள் எடுத்தது.
270 என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் கோலியும் ரஹானேவும் அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றியடைய செய்தனர். நேற்றைய போட்டியில் தனது 33வது ஒருநாள் சதத்தை கோலி பதிவு செய்தார்.

தனது பேட்டிங் திறமையால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை நிகழ்த்திவரும் கோலி, இந்த போட்டியிலும் சாதனை நிகழ்த்த தவறவில்லை. கேப்டனாக அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கங்குலியுடன் பகிர்கிறார் கோலி.
முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டனாக 142 போட்டிகளில் 11 சதத்தை பதிவு செய்தார். ஆனால் கோலியோ வெறும் 41 போட்டிகளில் 11 சதங்களை அடித்து விட்டார்.

கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை கங்குலியுடன் கோலி பகிர்ந்துகொள்கிறார். இவருக்கு முன்னதாக 22 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும் 13 சதங்களுடன் டிவில்லியர்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
கோலிக்கு முன்னாள் இருக்கும் இருவருமே தற்போது கேப்டனாக இல்லாததால், இந்த பட்டியலில் கோலி விரைவில் முதலிடம் பிடித்து விடுவார்.
