உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனி ஆஸ்திரேலிய தொடரில் ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான விஷயம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடி, மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து மீண்டும் தான் ஒரு பெஸ்ட் ஃபினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஐந்தாம் வரிசையில் இறக்கப்பட்ட தோனி, மெல்போர்னில் நடந்த கடைசி போட்டியில் நான்காம் வரிசையிலேயே இறக்கப்பட்டார். அவரும் கோலியும் இணைந்து ஆடியதே ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. 

நான்காம் வரிசை வீரருக்கான மிக நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு அந்த இடத்திற்கு ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் சோபிக்கவில்லை. முதலிரண்டு போட்டிகளில் நான்காம் வரிசையில் சரியாக ஆடாத ராயுடுவுக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டு, நான்காம் வரிசைக்கு தோனி புரமோட் செய்யப்பட்டார். தோனி பொதுவாக களத்தில் நிலைப்பதற்கு பந்துகளை எடுத்துக்கொள்ளும் வீரர் என்பதால், நின்று நிதானமாக ஆட அவருக்கு அந்த இடம் சரியாக அமைந்துவிட்டது. அவரும் நன்றாக ஆடினார். 

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆகிய இரண்டு போட்டிகளிலுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெற செய்தார். தோனி ஃபார்மில் இல்லாதது பிரச்னையாக இருந்த நிலையில், தோனி ஃபார்முக்கு வந்திருப்பதும் பிரச்னையாக அமைந்துள்ளது. தோனியை எந்த இடத்தில் இறக்குவது என்பதுதான் அது. 

தோனி முதல் போட்டியில் அரைசதம் அடித்த போதே, அவரை நான்காம் வரிசையில் இறக்கவேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று ரோஹித் சர்மா அதிரடியாக தெரிவித்தார். தற்போது அதே கருத்தை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, தோனி இந்த தொடர் முழுவதுமே அருமையாக பேட்டிங் ஆடினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனி இப்படி பேட்டிங் ஆடி பார்க்கிறோம். தோனி மிகவும் பொறுமையாக ஆடுகிறார் என்றாலும், அடிலெய்டில் அவர் ஆடிய இன்னிங்ஸ், அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது. எனவே தோனி 4வது இடத்திலும் கேதர் ஜாதவ் 5வது இடத்திலும் இறங்கலாம். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் தோனி, 5ம் வரிசையில் ஜாதவ், 6வது இடத்தில் தினேஷ் கார்த்திக், இது இந்திய அணிக்கு நல்ல பேட்டிங் ஆர்டர். களத்தில் நிலைக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் தோனிக்கு, 4ம் வரிசை சரியானதாக அமையும். அதன்மூலம் அவர் அவரது இன்னிங்ஸை சிறப்பாக ஆட முடியும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய கேப்டன் கோலி, 2016ம் ஆண்டில் தோனி 4ம் வரிசையில் சில போட்டிகளில் ஆடினார். ஆனால் அதன்பிறகு 5 அல்லது 6ம் வரிசையில் இறங்குவது அவருக்கு வசதியாக இருந்தது. நான் தனிப்பட்ட முறையில், அவர் 5ம் வரிசையில் இறங்குவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். 5ம் வரிசையில் இறங்குவதன் மூலம் அவருக்கு தேவையான நேரமும் கிடைக்கும், போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் ஃபினிஷர் வேலையையும் அவரால் செய்ய முடியும். அந்த வகையில் அவருக்கு 5ம் இடம் சரியாக இருக்கும் என்று கருதுவதாக கோலி தெரிவித்தார். 

கங்குலி, ரோஹித் சர்மா ஆகியோர் தோனியை 4ம் வரிசையில் இறக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கும் நிலையில், தோனிக்கு 5ம் இடம் தான் ஏற்றது என்று கேப்டன் கோலி கருதுகிறார்.