சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்துவருகிறார். 

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவரும் கோலி, சிட்னி போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. இந்த போட்டியில் வெறும் 23 ரன்களே அடித்து அவுட்டானார் கோலி. ஆனால் 19,000 சர்வதேச ரன்களை இந்த இன்னிங்ஸில் கடந்தார். 

இதன்மூலம் சர்வதேச போட்டிகளில்(டெஸ்ட், ஒருநாள், டி20) 19,000 ரன்களை விரைவில் கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரான சச்சினை பின்னுக்கு தள்ளி கோலி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். கோலி 399 இன்னிங்ஸ்களில் 19 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 432 இன்னிங்ஸ்களிலும் பிரயன் லாரா 433 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பாண்டிங் 444 இன்னிங்ஸ்களிலும் ஜாக் காலிஸ் 458 இன்னிங்ஸ்களிலும் 19 ஆயிரம் சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். இவர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி விரைவில் 19000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.