டெஸ்ட் போட்டியில் கேப்டனாக கங்குலியின் வெற்றி சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி, விரைவில் தோனியின் சாதனையையும் முறியடிக்க உள்ளார். 

இந்திய அணியை முன்னாள் கேப்டன்கள் கங்குலியும் தோனியும் அவரவர்கள் காலக்கட்டத்தில் வளர்த்தெடுத்துள்ளனர். இருவருமே சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன்களாக வலம்வந்தவர்கள். தற்போது விராட் கோலி, அவர்களின் கேப்டன்சி சாதனையை முறியடித்துவருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பிறகு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றியை பெற்று மீண்டெழுந்துள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் கேப்டன்சியில் கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியின் 22வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, அவற்றில் 21 வெற்றியை பதிவு செய்துள்ளது. கோலியின் தலைமையில் 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, இந்திய அணி 22 வெற்றியை பதிவு செய்துள்ளது. 22வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததன்மூலம் கங்குலியை பின்னுக்கு தள்ளியுள்ளார் கோலி.

27 டெஸ்ட் வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி 60 போட்டிகளில் ஆடி 27 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் கோலி 38 போட்டிகளிலேயே 22 வெற்றிகளை ருசித்துள்ளார். தோனியை முந்த இன்னும் 6 வெற்றிகளே தேவை என்பதால், தோனியின் சாதனையை கேப்டனாக கோலி விரைவில் முறியடித்துவிடுவார்.