Asianet News TamilAsianet News Tamil

கோலி, அஸ்வின் ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா…

kohli ashwin-india-emerged-from-the-match-with-the-righ
Author
First Published Nov 28, 2016, 12:05 PM IST


இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

முன்னதாக ஒரு கட்டத்தில் 156 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. ஆனால் கோலி, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது. கோலி 62 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். அஸ்வின் 57 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 12 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது. முன்னதாக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 283 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 89 ஓட்டங்கள் சேர்க்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி மேலும் 3.5 ஓவர்கள் மட்டுமே ஆடிய நிலையில் 283 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 12 ஓட்டங்களில் நடையைக் கட்ட, பார்த்திவ் படேலுடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. 8 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற பார்த்திவ் படேல் 85 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேப்டன் கோலி களம்புகுந்தார். கடந்த போட்டியில் 248 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைப் பறித்த கோலியை வீழ்த்துவதற்கு அவர் களம் கண்டது முதலே இங்கிலாந்து பெüலர்கள் கடுமையாகப் போராடினர்.

ஆனால் மிகவும் பொறுமையாக ஆடிய கோலி, சரியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இங்கிலாந்து பெüலர்களை தண்டித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா, தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 100 பந்துகளில் அரை சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 11-ஆவது அரை சதமாகும்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணி 148 ஓட்டங்களை எட்டியபோது புஜாராவின் விக்கெட்டை இழந்தது. அவர் 104 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்களில் ரஹானே டக் அவுட்டாக, அறிமுக வீரரான கருண் நாயர் 4 ஓட்டங்களில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதனால் இந்தியா 45.2 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய அஸ்வின், வோக்ஸ் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விளாசி, ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். மறுமுனையில் மிக நிதானமாக ஆடிய கோலி 111 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இந்தியா 204 ஓட்டங்களை எட்டியபோது கோலி ஆட்டமிழந்தார். அவர் 127 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 48 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து அஸ்வினுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியாவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற இங்கிலாந்து அணியின் கனவு தகர்ந்தது. ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் ஆடிய ஜடேஜா, ரஷித் வீசிய 78-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி வேகமாக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்தார்.

இதனிடையே ஆண்டர்சன் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 77 பந்துகளில் அரை சதம் கண்டார் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 9-ஆவது அரை சதம் இது. அதேநேரத்தில் இந்தத் தொடரில் 3-ஆவது முறையாக அரை சதம் விளாசியுள்ளார் அஸ்வின். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அஸ்வின் 82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57, ஜடேஜா 59 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios