ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு பதிலாக கிளாசன் சேர்க்கப்படுகிறார்.

ஐபிஎல் 11வது சீசன் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களம் காண்கின்றன. அதனால் தோனியின் ரசிகர்களும் சென்னை அணியின் ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித்துக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதை அடுத்து ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டதால், கேப்டனை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதேநேரத்தில், ஸ்மித்தின் இடத்தை நிரப்ப ஒரு வீரர் வேண்டும். அது யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், ஸ்மித்தின் இடத்தை தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் கிளாசன் பிடித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே தென்னாப்பிரிக்கா வென்றது. அந்த வெற்றிக்கு காரணம் கிளாசன் தான். அந்த அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொள்ள திணறிய சாஹல் மற்றும் குல்தீப்பின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் கிளாசன்.

இந்நிலையில், கிளாசனை அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. தற்போது ஸ்மித் விளையாடததால், அவருக்கு பதிலாக கிளாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.