ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ராகுலின் நேர்மையான செயல், அம்பயர் உட்பட அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 622 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ஆடவில்லை. மார்கஸ் ஹாரிஸ் மட்டுமே 79 ரன்கள் அடித்தார். அவரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் இந்திய அணியின் சுழலில் சுருண்டனர். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் 5வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மார்கஸ் ஹாரிஸ் தூக்கி அடிக்க, மிட் ஆனில் ஃபீல்டிங் செய்த ராகுல், அதை அபாரமாக டைவ் அடித்து பிடித்தார். ஆனால் தரையில் பட்டபிறகுதான் ராகுல் அதை கேட்ச் செய்தார். பந்து தரையில் பட்ட மாத்திரத்தில் ராகுல் பிடித்துவிட்டார். ராகுல் கேட்ச் செய்ததை பார்த்துவிட்டு பவுலர் ஜடேஜா உட்பட இந்திய வீரர்களை விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாட, ராகுலே மிகவும் நேர்மையாக பந்து தரையில் பட்டதாக கூறிவிட்டார். 

ஒருவேளை ராகுல் அதை சொல்லாவிட்டால், டிவி ரிப்ளே செய்து பார்க்க வேண்டிவரும். அதில் சில நிமிடங்கள் வீணாகும். ஆனால் இறுதியில் எப்படியும் உண்மை தெரிந்துவிடும். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத ராகுல் நேர்மையாக செயல்பட்டதால் நேர விரயம் தடுக்கப்பட்டது. ராகுலின் நேர்மையை கள நடுவர் கை தட்டி பாராட்டினார். ராகுலின் இந்த செயல், அம்பயரை மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயங்களையும் வென்றது.