ஐபிஎல் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்து கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் நேற்று தொடங்கியது. மும்பையும் சென்னையும் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக அஸ்வின் இந்த போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, கேப்டன் கம்பீரின் அரைசதத்தால் 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்கவிட்ட ராகுல், வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்னதாக 15 பந்துகளுக்கு யூசுஃப் பதான் அடித்ததே அதிவேக அரைசதமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராகுல் முறியடித்துள்ளார். ராகுலின் அதிரடியால், வெற்றியை நோக்கி பஞ்சாப் அணி ஆடிக்கொண்டிருக்கிறது.