ஐபிஎல் 12வது சீசனில் பஞ்சாப் அணி, சில அதிரடி வீரர்களுக்கு குறிவைத்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது. 

ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 12வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரை வென்றிராத கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ்(முன்பு டெல்லி டேர்டெவில்ஸ்) ஆகிய அணிகள் இந்த முறை தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

வரும் 18ம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், பஞ்சாப் அணி சில அதிரடி வீரர்களை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கழட்டிவிட்ட நியூசிலாந்து அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஹெட்மயர் ஆகிய இருவரையும் அணியில் எடுக்கும் முனைப்பில் உள்ளது என்பதை அந்த அணியின் டுவீட்டிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. 

கடந்த சீசனில் கிறிஸ் கெய்ல் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே சிறப்பாக ஆடினர். சீசனின் தொடக்கத்தில் முதல் 6-7 போட்டிகளில் அதிரடியான அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பிறகு பெரியளவில் இல்லாவிட்டாலும் நன்றாகவே ஆடினர். 

இந்நிலையில், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் ஹெட்மயர் மீதான ஆர்வத்தை பஞ்சாப் அணி வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த அந்த அணியின் டுவிட்டர் பதிவில், கெய்லுடன் பிரண்டன் மெக்கல்லம் தொடக்க வீரராக களமிறங்கி, மூன்றாவது வீரராக ஹெட்மயர் இறங்கினால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என டுவீட் செய்துள்ளது. 

பிரண்டன் மெக்கல்லத்தின் அதிரடியை ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் பார்த்திருப்போம். ஐபிஎல்லில் கெய்லுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் என்பது அவர் அடித்த 158 ரன்கள் தான். அதுவும் ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனின் முதல் போட்டியிலேயே இந்த ஸ்கோரை அடித்து மிரட்டினார் மெக்கல்லம். இந்த ஸ்கோரை 5 ஆண்டுகளுக்கு பிறகு 2013ம் ஆண்டு சீசனில் தான் கெய்ல் முறியடித்தார். 

எனவே ஐபிஎல்லின் டாப் ஸ்கோரர் இருவரையும் தொடக்க வீரர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ள பஞ்சாப் அணி, மூன்றாவது வீரராக இறக்கவுள்ள ஹெட்மயர், அண்மையில் இந்திய அணிக்கு எதிராக விளாசி தள்ளியவர். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை இவர் அபாரமாக ஆடி அடித்து நொறுக்குகிறார். 

இவர்களுடன் ராஜஸ்தான் அணி கழட்டிவிட்ட ஜெய்தேவ் உனாத்கத்தையும் எடுக்கும் முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது. பிரண்டன் மெக்கல்லத்தை அந்த அணி எடுக்கும் பட்சத்தில் மெக்கல்லம், கெய்ல் மற்றும் ராகுல் ஆகிய மூவரும் சுழற்சி முறையில் தொடக்க வீரர்களாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.