வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் கத்தி கத்தியே அந்த அணியை கலீல் அகமது கதறவிட்டார். போட்டிக்கு பின்னர் அதற்கான விளக்கத்தையும் அளித்தார் கலீல்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் மற்றும் ராயுடுவின் அபார சதத்தால் இந்திய அணி 377ரன்களை குவித்தது. 

378 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகள் ரன் அவுட். இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவரும் அந்த அணியின் இரண்டு வீரர்களில் ஒருவரான ஹோப், ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய அணியை தெறிக்கவிடும்  மற்றொரு வீரரான ஹெட்மயரை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கலீல் அகமது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, நேற்றைய போட்டியில் அபாரமாக வீசினார். ஹெட்மயர், அனுபவ வீரரான சாமுவேல்ஸ், ரோமன் பவல் ஆகிய மூவரையும் வீழ்த்தினார். 5 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த காலத்திலும் முக்கியமான பந்துவீச்சுகளில் ஒன்றாக இருக்கும். ஹெட்மயரை எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றியதால் உற்சாகமடைந்த கலீல் அகமது, அவ்வப்போது அம்பயரிடம் ரொம்ப சீரியஸாக அப்பீல் செய்துகொண்டே இருந்தார். ஸ்டம்பிற்கு மேலே சென்றுவிடும் என்று அப்பட்டமாக தெரிந்த பந்திற்கு கூட அப்பீல் செய்தார். 

போட்டி முடிந்ததும் இதுகுறித்து கலீல் அகமதுவிடம் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கலீல் அகமது, பேட்ஸ்மேனுக்கு அழுத்தமளிக்கும் விதமாக அடிக்கடி அப்பீல் செய்ததாக தெரிவித்துள்ளார். 

அப்பீல் செய்யலாம்.. அதுக்காக இப்படியா..?