ஐபிஎல்லில் இருந்து ஹாரி ப்ரூக் விலகியது ஏமாற்றம் அளித்ததாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Kevin Pietersen talking about Harry Brook: டெல்லி கேபிடல்ஸ் அணி ஆலோசகரும் இங்கிலாந்து முன்னாள் வீரருமான கெவின் பீட்டர்சன் இளம் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக்நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியதில் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். துணைக்கண்டத்தில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ப்ரூக்கிற்கு தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளதாகவும், 26 வயதான அவரை மேம்படுத்த உதவ விரும்பியதாகவும் பீட்டர்சன் கூறினார். கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ப்ரூகை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியது.
ஹாரி ப்ரூக் ஐபிஎல்லில் இருந்து விலகல்
ஆனால் இங்கிலாந்து அணியுடனான பிஸியான சீசனுக்கு முன்பு "தன்னை ரீசார்ஜ்" செய்ய வேண்டியதன் அவசியத்தைக் கூறி சீசன் தொடங்குவதற்கு முன்பே விலகினார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அணியின் சமீபத்திய ஐசிசி போட்டிகளில் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக ப்ரூக் இங்கிலாந்தின் புதிய வெள்ளைப் பந்து கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
2 ஆண்டுகள் ஐபிஎல் விளையாட தடை
தனது பாட்டியின் மரணம் என்ற தனிப்பட்ட காரணங்களால் கடந்த ஆண்டு ஐபிஎல்லை புரூக் தவிர்த்தார். மேலும் இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தையும் தவறவிட்டார். ஐபிஎல் விதிகளின்படி, தொடர்ச்சியாக இரண்டு முறை விலகியதால் இரண்டு ஆண்டுகளுக்கு லீக்கில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கெவின் பீட்டர்சன் ஏமாற்றம்
ஐபிஎல் 2023 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ப்ரூக் விளையாடினார், 11 போட்டிகளில் 22.11 சராசரியில் 190 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் மட்டுமே அவரது முக்கிய இன்னிங்ஸ் ஆகும். ESPNCricinfo உடனான உரையாடலில், இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது அவரது தொழில்நுட்பக் குறைபாடுகளை சரிசெய்வதில் அவரிடம் பணியாற்ற விரும்பியதால், லீக்கில் விளையாடும் அனுபவத்தை ப்ரூக் இழந்ததில் "மிகவும் ஏமாற்றமடைந்ததாக" கெவின் பீட்டர்சன் கூறினார்.
ஹாரி ப்ரூக்கின் குறைபாடுகள்
"நான் அவரிடம் சொன்னேன், 'நண்பா, சில மாதங்கள் உன்னுடன் பணியாற்ற முடியாததால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனெனில் அவர் ஒரு ஸ்டார் வீரர் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் விளையாட முடியாவிட்டால், கூடுதல் கவரில் ஒரு பந்தை அடித்து, அடுத்த அதே பந்தை மிட்விக்கெட்டில் அடிக்க மாட்டீர்கள்,' என்று பீட்டர்சன் கூறினார். "எனவே அவர் சரியாக விளையாட முடியும், ஆனால் துணைக்கண்டத்தில் குறிப்பாக இந்தியாவில் அவருக்கு தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. நான் உண்மையில் அவருடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் அவர் விலகியது ஏமாற்றத்தை தருகிறது. ஆனாலும் அவரின் சொந்த முடிவை மதிக்க வேண்டும் '' என்றும் பீட்டர்சன் தெரிவித்தார்.


