இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் புதிய கொள்கையின் காரணமாக ஏலத்தில் பங்கேற்க முடியாது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ஈசிபி) தகவல் தெரிவித்துள்ளது.
வாரியத்தின் புதிய கொள்கையின்படி, புரூக் இந்த ஐபிஎல் சீசனை கடைசி நேரத்தில் தவிர்க்க முடிவு செய்துள்ளதால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.
"கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு வீரருக்கும் தெரிவிக்கப்பட்ட கொள்கையின்படி, பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஹாரி புரூக்கிற்கு அதிகாரபூர்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கொள்கையாகும், ஒவ்வொரு வீரரும் அதற்குக் கட்டப்பட்டிருக்க வேண்டும்" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் அறிமுகப்படுத்திய புதிய விதியின்படி, "ஏலத்தில் பதிவுசெய்து, தேர்வு செய்யப்பட்ட பிறகு, சீசன் தொடங்குவதற்கு முன்பு விளையாட முடியாமல் தவிக்கும் எந்தவொரு வீரரும், 2 சீசன்களுக்கு போட்டி மற்றும் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும்."
இங்கிலாந்து அணிக்காக விளையாடத் தயாராக வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி, ஐபிஎல்லில் தனது இரண்டாவது சீசனை விளையாடாமல் விலகியுள்ளார். நவம்பரில் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அவரை ரூ.6.25 கோடிக்கு வாங்கியது. முந்தைய ஏலத்திலும், டெல்லி அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது.
"வரவிருக்கும் ஐபிஎல்லில் இருந்து விலகும் மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன்," என்று புரூக் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். "டெல்லி கேபிடல்ஸ் மற்றும் அணியின் ஆதரவாளர்களுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். நான் சிறுவனாக இருந்ததிலிருந்தே, என் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன், இந்த மட்டத்தில் நான் விரும்பும் விளையாட்டை விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நம்பும் மக்களின் வழிகாட்டுதலுடன், இந்த முடிவை தீவிரமாக பரிசீலிக்க நேரம் எடுத்துக்கொண்டேன். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம், மேலும் வரவிருக்கும் தொடருக்குத் தயாரிப்பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இதைச் செய்ய, எனக்கு நேரம் தேவை" என புரூக் தெரிவித்துள்ளார்.
புரூக்கின் முடிவு டெல்லி கேபிடல்ஸுக்குப் பிடிக்காமல் போகலாம். கடந்த ஆண்டும் அவர் தனது பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து அணியிலிருந்து விலகினார். ஆனால் அந்த அணி அவரை மீண்டும் ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது.
