வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி முதலில் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியே அறிவிக்கப்பட்டது. இரண்டு போட்டிகள் முடிந்ததும் எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில், ஆசிய கோப்பை தொடரில் காயமடைந்து பின்னர் குணமடைந்த கேதர் ஜாதவ் சேர்க்கப்படவில்லை. 

ஆசிய கோப்பை தொடரின்போது கேதர் ஜாதவ் காயமடைந்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆனால் காயம் குணமடைந்து தியோதர் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்காக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார் கேதர் ஜாதவ். அவர் காயத்திலிருந்து குணமடைந்தும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த கேதர் ஜாதவ், அனைத்துவிதமான உடற்தகுதியிலும் தேர்வாகிவிட்டேன். காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து உடற்தகுதியில் தேர்வாகியுள்ளேன். அதனால்தான் தியோதர் டிராபியில் ஆட தேசிய கிரிக்கெட் அகாடமி எனக்கு அனுமதியளித்தது. ஆனாலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. நான் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்ற காரணத்தை கூட என்னிடம் சொல்லவில்லை என்று கேதர் ஜாதவ் வேதனை தெரிவித்திருந்தார். 

கேதர் ஜாதவ் குற்றம்சாட்டிய பிறகு விளக்கமளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கேதர் ஜாதவ் உடற்தகுதி காரணமாகவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. அவர் அணிக்கு திரும்பும்போதெல்லாம் காயம் காரணமாக வெளியேறுகிறார். ஆசிய கோப்பை தொடரிலும் காயத்தால் அவதிப்பட்டார். அதனால் அவரது உடற்தகுதியை பரிசோதிக்க போதுமான போட்டிகளில் அவர் ஆட வேண்டியிருப்பதால் அணியில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஒருநாள் அணியில் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கேதர் ஜாதவ் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஒருவேளை கேதர் ஜாதவ், தான் ஒதுக்கப்பட்டது குறித்து எதுவுமே கேட்கவில்லை என்றால், கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பாரா என்று தெரியவில்லை.