ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. தோனி தலைமையில் சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் நெருங்கிய நிலையில், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிக்கு புதிய சவால் உருவானது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. 

இதையடுத்து ஸ்மித் கேப்டனாக இருந்த ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும், வார்னர் கேப்டனாக இருந்த ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள கேன் வில்லியம்சன், கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள வார்னர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, பந்து சேதப்படுத்தப்பட்டதும் வார்னரின் செயலும் கண்டிக்கத்தக்கது தான். ஆனால், வார்னர் உண்மையாகவே அதுபோன்ற தவறான நபர் கிடையாது. எதிர்பாராத விதமாக அந்த தவறு நடந்துள்ளது. ஆனால், தவறு தவறு தான். உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.