பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளதால், விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் விராட் கோலி சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாட வாய்ப்புள்ளது.

இந்திய ஸ்டார் வீரர் விராட் கோலி 50 ஓவர் உள்நாட்டுத் தொடரான விஜய் ஹசாரே டிராபிக்கு (VHT) திரும்புகிறார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) தலைவர் வெங்கடேஷ் பிரசாத் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றதால், கோலி தனது அனைத்துப் போட்டிகளையும் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாட வாய்ப்புள்ளது.

புறக்கணிப்பட்டு வந்த சின்னசாமி ஸ்டேடியம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றதைக் கொண்டாடியபோது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியானதை தொடர்ந்து சின்னசாமி ஸ்டேடியம் "பெரிய அளவிலான போட்டிகளுக்கு தகுதியற்றது" என்று அறிவிக்கப்பட்டது. 

அன்று முதல் இந்த மைதானத்தில் எந்தவொரு உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. KSCA-வின் மகாராஜா டிராபி ஆகஸ்ட் மாதம் மைசூருக்கு மாற்றப்பட்டது. மேலும் மகளிர் உலகக்கோப்பையும் நடைபெறவில்லை. 2026 டி20 உலகக்கோப்பை போட்டிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி விளையாடுகிறார்

ஆனால் இப்போது, சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) கவனத்திலும் உள்ளது. இதனால் விராட் கோலி தனது அனைத்து VHT போட்டிகளையும் தனது RCB ஹோம் கிரவுண்டில் விளையாடலாம். தற்போதைக்கு, கோலி மற்றும் இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இருவரும் இந்தத் தொடருக்கான சாத்தியமான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளும் நடைபெறுமா?

வெங்கடேஷ் பிரசாத் மற்றும் KSCA துணைத் தலைவர் சுஜித் சோமசுந்தர் ஆகியோர் இந்த வாரம் பெலகாவியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் பிற அரசு அதிகாரிகளைச் சந்தித்தனர். 

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டின் நட்சத்திர அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்காக சில ஸ்டாண்டுகளைத் திறந்து 2,000-3,000 ரசிகர்களுக்கு இடமளிக்க KSCA திட்டமிட்டுள்ளதாக தகவவ் வெளியாகி உள்ளது. விஜய் ஹசாரே டிராபியை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளையும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.