3-வது உலக கோப்பை கபடி (ஆண்களுக்கான) போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.
>
>
>
> வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், அமெரிக்கா, போலந்து, கென்யா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
>
>
>
> ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.
>
>
>
> தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 23-17, 28-25, 30-27 என்ற வீதம் முன்னிலை பெற்றது.
>
>
>
> ஆனால் கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் நிலைமை தலைகீழானது. கொரிய வீரர் ஜான் குன் லீ, தனது ரைடில் 3 பேரை அதிரடியாக வெளியேற்றி ஸ்கோரை 30-30 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மேலும் சிலரை கொரிய வீரர்கள் அவுட் செய்தனர்.
>
>
>
> திரிலிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் தென்கொரியா 34-32 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது.
>
>
>
> இந்திய அணி, இன்று நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (இரவு 9 மணி) சந்திக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred