Junior World Cup Final match India - Australia clash with tomorrow ...
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன.
நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரைஇறுதியில் இந்தியா 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தின.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் மௌன்ட் மாங்கானு மைதானத்தில் நாளை நடக்கிறது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். பேட்டிங்கில் கேப்டன் பிரித்வி ஷா (232 ஓட்டங்கள்), சுப்மான் கில் (341 ஓட்டங்கள்), பந்து வீச்சில் அன்குல் ராய் (12 விக்கெட்), ஷிவம் மாவி (8 விக்கெட்), கம்லேஷ் நாகர்கோட்டி (7 விக்கெட்), இஷான் போரெல் (4 விக்கெட்) எடுத்து அசத்தியுள்ளனர்.
ஏற்கனவே 2000, 2008, 2012-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி இந்த கோப்பையை வென்று இருக்கிறது. இந்த முறையும் வாகை சூடினால், அதிக முறை ஜூனியர் உலக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைக்கும்.
இந்திய அணிக்கு, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பது சாதகமான அம்சமாகும். லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இளையோர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 34 ஆட்டங்களில் 20-ல் இந்தியாவும், 14-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டிருக்கிறது.
இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும்.
