Japan Super Series Indian veteran Sadhgisayiraj advanced to the round ...
ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும், இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை கலப்பு இரட்டையர் பிரிவிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிரக் ஷெட்டியுடன் இணைந்துள்ளார் சாத்விக்சாய்ராஜ்.
இந்த இணை தனது முதல் சுற்றில் ஜப்பானின் ஹிரோகட்சு ஹஷிமோடோ - ஹிரோயுகி சேகி இணையுடன் மோதியது.
இதில், 14-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் ஹிரோகட்சு ஹஷிமோடோ - ஹிரோயுகி சேகி இணையை வீழ்த்தி வென்றது.
தொடர்ந்து 2-வது சுற்றில் ஜப்பானின் கீசிரோ மட்சுய் - யோஷினோரி டேகியுசி இணையுடன் மோதி 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
பிரதான சுற்றுக்கு சாத்விக்சாய்ராஜ் - சிரக் இணை போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஃபெர்னால்டி கிடியான் - கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையுடன் இன்று மோதுகிறது.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - அஸ்வினி பொன்னப்பா இணை, தனது முதல் சுற்றில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா - நட்சு சைடோ இணையுடன் மோதியது.
இதில், 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹிரோகி மிடோரிகவா - நட்சு சைடோ இணையை வீழ்த்தியது.
தொடர்ந்து தனது 2-வது சுற்றில் ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா - நாரு ஷினோயா இணையுடன் மோதி 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வென்று பிரதான சுற்றுக்கு தகுதிப் பெற்றது.
பிரதான சுற்றில் சாத்விக்சாய்ராஜ் - அஸ்வினி பொன்னப்பா இணை தாய்லாந்தின் டின் இஸ்ரியானெட் - பச்சராபுன் சோசுவாங் இணையுடன் இன்று மோதுகிறது.
அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவின் பிரதான சுற்றில், இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை தனது 2-வது சுற்றில் ஜப்பானின் டோமோயா டகாஷினா - ரீ எடோ இணையுடன் மோதி 21-19, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்றது.
